விளக்கு

Vilakku

விளக்கின் வரலாறு

அமெரிக்க ‘விளக்கு இலக்கிய அமைப்பு’ தற்கால தமிழ் இலக்கியத்தைப் பற்றிய புரிதலை ஊக்குவிக்கவும், அதில் ஆர்வத்தை உருவாக்கவும் சில நண்பர்களால் 1994 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக இவ்வமைப்பு நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான புதுமைப்பித்தனின் பெயரில் இலக்கிய விருது ஒன்றை நிறுவியது. இது நிறுவன விருதுகளால் இதுவரை அங்கீகரிக்கப்படாத தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து வழங்கப்படும் பணத்தொகை விருதாகும். இதன் முதல் விருது 1996 ஆம் ஆண்டு சி. சு. செல்லப்பா அவர்களுக்கு வழங்கப்பட்டது. செல்லப்பா இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க தமிழ் இலக்கியப் பத்திரிகைகளுள் ஒன்றான ‘எழுத்து’ என்னும் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். இப்பத்திரிகை தமிழில் புதுக்கவிதை என்னும் வடிவத்தை பரிசோதித்துப் பார்த்த பல கவிஞர்களுக்கு மேடை அமைத்துக்கொடுத்து தமிழில் புதுக்கவிதை என்னும் புதிய இலக்கிய வகைமையை நிலைநிறுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியைச் செய்தது.

விளக்கு இலக்கிய அமைப்பு 1998 ஆம் ஆண்டு ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாக முறையாக பதிவு செய்யப்பட்டது. இவ்வமைப்பு கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல் படைப்பிலக்கியம், புனைவில்லா எழுத்துகள் என்ற இரு வகைகளுக்கும் தனித்தனியே இரண்டு விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதுவரை 32 எழுத்தாளர்கள் விளக்கு விருதுகளால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்விருதுகள் உறுப்பினர்களின் பங்களிப்புகளாலும், மேலும், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் பிரபா பாலா – பாலா சுவாமிநாதன் குடும்ப அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் கொடைகளாலும் அளிக்கப்படுகின்றன.

செயற்குழு

‘விளக்கு இலக்கிய அமைப்பு’ உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆறு பேர் கொண்ட செயற்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.
தலைவர்: நா. கோபால்சாமி, ராக்வில், மேரிலாந்து, அமெரிக்கா
துணைத் தலைவர்: கோ. ராஜாராம், நியூ ஹேவன், கனெக்டிகட், அமெரிக்கா
பொதுச் செயலாளர்: மு. சுந்தரமூர்த்தி, நேஷ்வில், டென்னிசி, அமெரிக்கா
உறுப்பினர்: சொர்ணம் வ. சங்கர், எல்லிகாட் சிட்டி, மேரிலாந்து, அமெரிக்கா
உறுப்பினர்: செந்திவேல் வெள்ளைச்சாமி, லாஸ் ஏஞ்சலெஸ், கலிஃபோர்னியா, அமெரிக்கா

நடுவர் குழு

விளக்கு விருதாளர்கள் மூன்று நடுவர்கள் கொண்ட குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இக்குழு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக மாற்றியமைக்கப்படுகிறது. தற்போதுள்ள குழுவின் (2022-24) உறுப்பினர்கள்:
பேராசிரியர் வ. கீதா (சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்), சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சி. மோகன் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர்), சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இரா. சண்முக சுந்தரம் (மொழிபெயர்ப்பாளர்), மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா

இந்திய ஒருங்கிணைப்பாளர்கள்

விளக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, ஊடகத் தொடர்பு போன்ற செயற்பாடுகளின் இந்திய ஒருங்கிணைப்பாளர்கள்:
அ. வெற்றிவேல், மதுரை, தமிழ்நாடு, இந்தியா (முதன்மை ஒருங்கிணைப்பாளர்)
‘வெளி’ ரங்கராஜன், சென்னை, தமிழ்நாடு, இந்தியா (இணை ஒருங்கிணைப்பாளர்)